சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது புதிய ரெயில் பாதை

317 0

சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4-வது புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரெயில்வே முனையங்கள் உள்ளன. தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.

தாம்பரம் ரெயில் நிலையத்தின் தரத்தை உயர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.3 கி.மீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆய்வுப்பணிகளுக்கு ரூ.5.38 லட்சத்தை ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.

சென்னை எழும்பூர்- கடற்கரை இடையே தற்போது 2 தண்டவாள பாதையில் புறநகர் ரெயில்களும், ஒரு பாதையில் விரைவு ரெயில் மற்றும் சரக்கு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

4-வது புதிய ரெயில் பாதை அமைப்பதன் மூலம் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி வழியாக விஜயவாடாவுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும்.

மேலும் வட மாநிலங்களுக்கு ரெயிலில் செல்ல சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் குவிவது குறைக்கப்படும்.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வடக்கு நோக்கி செல்லும் ரெயில்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக தரம் உயர்த்துவதன் முலம் ஹவுரா, பாட்னா, கவுகாத்தி செல்லும் ரெயில்களை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்க முடியும்.

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்துவதற்கு வசதியாக கூடுதல் நடைமேடைகள் உருவாக்கப்படும். அனைத்து நடைமேடைகளை இணைக்கும் வகையில் புதிய நடைமேம்பாலம் அங்கு கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.