மார்பக புற்றுநோய்- 5வது இடத்தில் தமிழகம்

214 0

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தென்மாநிலங்களை பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மார்பக புற்றுநோய் அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில் தான் அதிக அளவில் மார்பக புற்றுநோயாளிகள் இருக்கிறார்கள். அங்கு 24 ஆயிரத்து 181 பேருக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது. இதில் 2-வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 16 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

3-வது இடத்தில் உள்ள மேற்கு வங்காளத்தில் 12 ஆயிரத்து 234 பேரும், 4-வது இடத்தில் உள்ள பீகாரில் 11 ஆயிரத்து 378 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வரிசையில் 5-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இங்கு 10 ஆயிரத்து 269 பேர் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். நோய் தாக்குதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இங்கு 2016-ம் ஆண்டு 9 ஆயிரத்து 486 பேரை நோய் தாக்கி இருந்தது. 2017-ல் அது 9 ஆயிரத்து 870 ஆக உயர்ந்தது. இப்போது அதைவிட அதிகரித்து இருக்கிறது.

தென் மாநிலங்களில் கர்நாடகாவை பொறுத்தவரை தமிழ்நாட்டை விட 10 சதவீதம் நோய் தாக்குதல் குறைவாக இருக்கிறது. ஆந்திரா, கேரளாவில் தமிழ்நாட்டை விட 40 சதவீதம் குறைவாக உள்ளது.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் டாக்டர் சாமிநாதன் இதுபற்றி கூறும்போது, சென்னை நகரிலும் மார்பக புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. ஒரு லட்சம் பெண்களை கணக்கில் எடுத்து கொண்டால் 2 சதவீதம் வரை அதிகரிப்பு விகிதம் இருக்கிறது என்று கூறினார்.

மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என தெளிவாக குறிப்பிட முடியாது. ஆனால் உணவு பழக்க வழக்கம் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பாக்கெட் உணவுகள்

பொதுவாக பாக்கெட் உணவுகள், நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் உணவுகள் போன்றவற்றை இப்போது சாப்பிடுவது அதிகரித்து இருப்பதால் அது உடலில் உள்ள ஹார்மோன்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அது மார்பக புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருப்பதாக கருதுகிறோம். மேலும், உடல் பருமனும் இதற்கு காரணமாக அமைகிறது. நம்முடைய பழக்க வழக்கங்களால் உடலில் உள்ள மரபணுக்களில் பாதிப்பு ஏற்பட்டு அதுவும் புற்றுநோய்க்கு காரணமாக உள்ளது.

மேலும் பரம்பரை பரம்பரையாக புற்றுநோய் அணுக்கள் வாரிசுகளுக்கு பரவி அதன் அடிப்படையிலும் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேற்கத்திய நாடுகளில் 50-லிருந்து 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை 40-லிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த தாக்குதல் அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் பல பெண்கள் 20-லிருந்து 30 வயதுக்குள்ளேயே கூட மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இது கவலை அளிக்கக்கூடிய வி‌ஷயம் என்று மற்றொரு நிபுணர் கூறினார்.

இந்தியாவில் முன்கூட்டியே நோய்களை கண்ட றிந்து தடுப்பது குறைவாக இருக்கிறது. எனவே அடிக்கடி இதன் பரிசோதனைகளை செய்து முன்கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம்.

மார்பகத்தில் சிறு மாற்றங்கள் இருந்தாலும் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.