வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் நேற்று (21) இரவு சுமார் 8.00 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 100 அடி பாதாள பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை பகுதியிலிருந்து கரோலினா பகுதிக்கு கடும் ஏற்றம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது சாரதி உட்பட நான்கு பேர் முச்சக்கரவண்டியில் இருந்துள்ளனர்.
இதில் சாரதி சிறிய காயங்களுடன் தப்பியுள்ளதுடன் ஏனைய மூவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகச்சைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்து விபத்து முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக முச்சக்கரவண்டி பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் உருண்டுள்ளது இதனால் முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.
இதனால் இவர்கள் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம தெரிய வந்துள்ளன.
குறித்த முச்சக்கர வண்டி குறுக்கு வீதியிலிருந்து உருண்டு வந்து தலை கீழாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வீழந்துள்ளது.
இதனால் முச்சக்கரவண்டி சுக்குநூறாகியுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

