இனவாதத்தின் தந்தை என்பதை விமல் உறுதிப்படுத்தியுள்ளார் – வேலுகுமார்

225 0

இன்றைய நவீன உலகிலும் தான்தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளாரென கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இவர்போன்ற அரசியல்வாதிகள்தான் நாட்டில் இனவாதத்துக்கு தூபமிட்டு இன ஐக்கியத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகையை நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கியமையை கண்டித்து வேலுகுமார் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மன்னாரிலுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை அமைச்சர் விமல் வீரவன்ஸ கடந்த 18ஆம் திகதி திறந்துவைத்தார்.

இதன்போது – திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழியே முதலில் இருந்தது. இதனைக்கண்டு கொதிப்படைந்த விமல் வீரவன்ஸ, குறித்த பெயர்ப் பலகையை உடன் நீக்கிவிட்டு, சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்குமாறு பனை அபிவிருத்திச் சபையின் தலைவருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். இதன்படி தற்போது தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வழமையாக வாக்குவேட்டைக்காக சிங்கள, பௌத்த மக்களின் மனங்களில் இனவாதத்தை விதைத்து அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் விமல் வீரவன்ஸ, தற்போது இதனை வடக்கிலும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அவரின் இந்த குரோதச்செயலை ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம். வன்மையாகக் கண்டிப்பதுடன் இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவோம்.

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாகமொழியாக தமிழை பயன்படுத்துவதற்கும் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இவ்விரு மாகாணங்களிலுள்ள அரச திணைக்களங்கள், நிறுவனங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவதே ஏற்புடைய நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்ட உரிமைகளைக்கூட கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பறிக்க முற்படுகின்றது. சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடைபோட்டவர்கள் தற்போது தமிழ் மொழியில் பெயர்ப்பலகை வைப்பதற்கும் தடை போடுகின்றனர்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.