மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்!

237 0

மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை கிண்ணியால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாம் ஆட்சிக்கு வந்து மறு நாளே மத்திய வங்கி கொள்ளையர் களையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளையும் ; சிறையிலடைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இது பற்றி விசாரணை கூட நடத்த முடியவில்லை. மக்களுக்கு வழங்குவதாகக் கூறிய நிவாரணங்களை வழங்க முடியவில்லை.

ஆனால் எமது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களின் கொடுப்பனவை நிறுத்தியுள்ளார்கள், நாம் குறைத்த மருந்து பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார்கள், ஆட்சிக்கு வந்தவுடன் நாம் வழங்கிய சலுகைகளை நிறுத்தியுள்ளார்கள்.

ஏன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கேட்டால் பாராளுமன்றத்தில் எமக்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்

நாங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய போது எமக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கவில்லை. பெரும்பான்மை இன்றியே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம்.

பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைபரிசில் தொகையை அதிகரித்தோம். நூறு நாள் திட்டத்தில் பல அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே மீண்டும் மீண்டும் மக்கள் முன் பொய் உறைக்காமல் மத்திய வங்கி கொள்ளையர்களையும் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள், விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறிய இலவச உரத்தை வழங்குங்கள், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரியுங்கள், பட்டதாரிகளுக்கு வேலை வழங்குங்கள், மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்.

இதற்கு நாம் மூன்றில் இரண்டு அல்ல அதற்கு மேலான ஆதரவையும் பாராளுமன்றத்தில் வழங்கத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்தார்.