திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தக்கோரி வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

369 0

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்தக்கோரிய மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய 12-வது வார்டு உறுப்பினர் சுப.சுப்பையா, உயர் நீதிமன்ற கிளையி்ல் தாக்கல் செய்த மனுவில், “திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சுயேட்சை உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்களை மிரட்டி வந்தனர்.

அதிகாரிகளின் துணையுடன் சுயேட்சை கவுன்சிலர்களை கடத்தவும் அதிமுகவினர் முயன்றனர். அது முடியாததால் கவுன்சிலர்களின் குடும்பத்தினரை மிரட்ட தொடங்கினர்.

இதனால் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலை வீடியோவில் பதிவு செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

 

என் மனு விசாரணைக்கு வந்தபோது தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வீடியோவில் பதிவு செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் அலுவலர் உறுதியளித்தார்.

ஜன. 11-ல் தலைவர் தேர்தலுக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆஜராகியிருந்தனர். ஆனால் தேர்தல் நடத்தினால் ஆளும் கட்சியால் வெற்றி்ப்பெற முடியாது என்பதால் தேர்தல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

ஆளும் கட்சிக்கு சாதகமாக மாவட்ட ஆட்சியர் தேர்தலை ஒத்திவைத்தார். இதன் மூலம் சுயேட்சை வேட்பாளர்களை மிரட்டுவதற்கு ஆளும்கட்சிக்கு ஆட்சியர் அவகாசம் அளித்துள்ளார். எனவே தலைவர், துணைத் தலைவர் தேர்தலை ரத்து செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உடனடியாக திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.