கொடுமைக்கு எதிராக கொதிக்கும் பொங்கல் இது! – அம்மா உணவகம் பேர்லின்

437 0

பல ஆண்டுகளாக போரினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு பொங்கல் எள்ளளவும் இனிப்பான பொங்கல் அல்ல என்பது தெரிந்ததே. தமிழீழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் எமது உறவுகள் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியில் போரின் வடுக்களுடன் உண்ணப் போதிய உணவின்றி உடுக்கத் துணியின்றி இருக்க இடமின்றி நோய்க்கு மருந்தின்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் அல்லல்படுகிறார்கள். மக்களை மீள் குடியேற்றம் செய்து விட்டோம் என்று சிங்கள அரசு சொன்னாலும் அவர்களில் பெரும்பானோர் தமது சொந்த கிராமத்தில் முழுமையாக இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பவில்லை.

அந்தவகையில் புலம்பெயர் தேசத்திலும் மற்றும் தாயகத்திலும் தமிழர் திருநாளை நாம் கடைபிடிப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் தமது வீடுகளில் பொங்குவதற்கு கூட எவ்வித வசதிகள் அற்ற நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் இத் திருநாளில் பொங்க வைப்பது எமது தார்மீக கடமையாகும்.

அந்த உயரிய நோக்கத்திற்காக பேர்லின் அம்மா உணவகம் மிகப் பெரும் பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வரும் வரலாற்று மிக்க “மயில் குஞ்சன் ” குடியிருப்பு , கைவேலி மக்களுக்கு இன்றைய தினம் யேர்மனி பேர்லினில் வசிக்கும் திரு ஆறுமுகம் தயாபரன் குடும்பத்தின் முழுமையான நிதி அனுசரணையில் 40 குடும்பங்களுக்கு பொங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி வைத்தது. இவ் நிகழ்வு குறிப்பிட்ட கிராம மக்களின் தேவையில் மிகவும் கரிசனை கொண்டவாரன திரு கனகையா அழகேந்திரன் அவர்களின் தலைமையில் மற்றும் கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சங்கத் தலைவர் திரு உமாகாந்தன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்பெரும் உதவியை தகுந்த நேரத்தில் வழங்கிய திரு ஆறுமுகம் தயாபரன் அவர்களின் குடும்பத்திற்கு தாயக மக்களின் சார்பில் அம்மா உணவகம் தமது அன்பு வாழ்த்துகளை தெரிவிக்கின்றது.

பிறக்கப் போகும் இந்தத் தைப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைப் பீடித்த பீடுகள் அனைத்தும் மறைந்தொழியும் என நம்புகிறோம்.

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். உலகளாவிய தமிழ்மக்கள் இன்பம் பொங்கட்டும். அந்த நம்பிக்கையோடு திருவள்ளுவராண்டு 2051 இல் காலடி எடுத்து வைப்போம்.

அனைத்து உள்ளங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகளை பேர்லின் அம்மா உணவகம் அன்புடன் தெரிவிக்கின்றது .