தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாட தயாராகும் மக்கள்

237 0

உலகவாழ் இந்துக்கள் நாளை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாட இந்துக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வியாபாரங்கள் களைகட்டியுள்ளதுடன், தமிழ் மக்கள் அனைவரும் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

அதற்கமைய கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை நுவரெலியா, மலையகம் என நாட்டின் நாலாபுறமும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொங்கள் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தையில் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்காட்டி வருவதோடு, புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலாவது தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

பொங்கலுக்கு தேவையான பழங்கள் மற்றும் வெடிபொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல மன்னார் பஸார் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களில் இந்து மக்கள் தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள், புத்தாடைகள் போன்றவற்றை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதேவேளை நாளை தைத்திருநாளை நினைவு கூறும் வகையில் மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

தைப்பொங்கல் தினமான நாளை 6 மணியளவில் மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதேபோல இந்து மக்களால் கொண்டாடப்படும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை நாளைய தினம் கொண்டாடுவதற்கு அம்பாறை மாவட்ட மக்கள் பல்வேறு வகையிலும் தயாராகி வருகின்றனர்.

கல்முனை பாண்டிருப்பு உள்ளிட்ட சந்தை பகுதியில் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதோடு, மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.