சிறுவன் ஒருவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஷசி மகேந்திரனால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கிருலபனை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரொருவருக்வே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 6 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு பிரதிவாதிக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் பிரதிவாதிக்கு மேலும் 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மற்றும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிருலபனையில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை கடுமையாக பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக குறிப்பிட்டு சட்டமா அதிபரால் பிரதிவாதிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக நீதிபதியால் இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

