நள்ளிரவில் திடீரென திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் – மன்னார்குடியில் பரபரப்பு

207 0

மன்னார்குடியில் நள்ளிரவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் அ.தி.மு.க.வினரால் திறந்து வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபால சமுத்திரம் கீழவீதியில் அ.தி.மு.க.வின் மாவட்ட கட்சி அலுவலகம் உள்ளது. அதற்கு சற்று தொலைவில் தெற்கு வீதியி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் முழுஉருவ வெண்கல சிலை சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டிருந்தது. அனுமதி மற்றும் பல்வேறு காரணங்களினால் அந்த சிலை திறக்கப்படாமலே இருந்தது.

கடந்தாண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எம்.ஜி.ஆர் சிலை துணிகளால் முழுவதும் சுற்றப்பட்டு சிலை இருக்கும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பிற்காக சுமார் 15 அடி உயரத்திற்கு இரும்பு சீட்டுகள் மூலம் அடைக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்தாண்டு வீசிய கஜா புயலின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் இரும்பு சீட்டுகள் சேதமடைந்தன. பின்னர் அ.தி.மு.க.வினர் புதிய இரும்பு சீட்டுகளை அமைத்து எம்.ஜி.ஆர். சிலையை பாதுகாப்பாக மூடி வைத்திருந்தனர்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தின் அருகிலேயே புதிய பீடம் ஒன்று அமைக்கப்பட்டு ஜெயலலிதாவின் 7 அடி உயர முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 2 சிலைகளிலும் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டு அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்த போது தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறினர். இந்த சம்பவம் மன்னார்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.