இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி உயிர்த்தெழுவோம்- தாயக இளம் கவி காங்கேயன்

341 0

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற தாயக இளம் கவிஞனுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஆற்றிய பெரும் பணி .

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.

அந்த வகையில்
மழலையும் மறக்குமா’-இளம் கவிஞர் காங்கேயன் வி.சு.விஜயலாதனின் கவிதை நூல் சென்ற வாரம் தாயகத்தில் வெளியிடப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயலாதனின் ‘மழலையும் மறக்குமா’ என்ற கவிதைநூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.

இறுதிப் போர்க்காலத்தில் மிகக் கடுமையாக காயமடைந்து கண்பார்வையை முற்றாக இழந்தவர் விஜயகுமார் விஜயலாதன். முடங்கிக் கிடக்காமல் முயற்சியினால் இன்று பல்கலைக்கழக மாணவராக, விளையாட்டு வீரராக, பல்துறைக் கலைஞராக பரிணமித்து நிற்கிறார்.

மீண்டும் பெறமுடியாத விழிப்புலனை எமக்காக இழந்த இந்த இளைஞன், தனது கண்களால் அன்று பதிவுசெய்த காட்சிகளை, தமிழினம் சுமந்த பெரும் துயரங்களை, ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, வரலாற்றின் நேரடிச் சாட்சியாக இருந்து இன்று எழுத்தில் வடித்திருக்கிறார்.

நூலினை கேணல் . இளங்கோவின் தாயார் புனிதவதி அம்மா வெளியிட்டு வைக்க, அதன் முதல் பிரதியை நாட்டுப்பற்றாளர் அமரர் கருணானந்தசிவம் அவர்களின் பாரியார் கலாவதி கருணானந்தசிவம் அவர்கள் பெற்றுக் கொண்டார். அதன்பின்னர் அவையிலே சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. இக்கவிதை நூலை விழிப்புல வலுவிழந்த மாற்றுத்திறனாளிகளும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கவிஞரால் ஒலி வடிவில் இறுவட்டு ஒன்றும் வெளியிடப்பட்டது.

வரலாற்றை முதற்தர பட்டறிவோடு பதிவுசெய்யும் இந்த இளம் படைப்பாளியின் முயற்சிக்கு யாழ் பல்கலைக்க சமூகமும் உறுதுணையாக இருந்ததோடு, அத்தோடு இந்த நூல் வெளிவர யேர்மன் தமிழ் இழையோர் அமைப்பினர் பேர்லினில் நடைபெற்ற அறம் செய் நிகழ்வின் ஊடாக நிதி அணுசரணை வழங்கி இருந்தது முன்மாதிரியாகும்.