மூடப்போவதாக வெளியான தகவல் வதந்தியே – ‘ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து இயங்கும்’

225 0

ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படுகிறது அல்லது இயக்கம் நிறுத்தப்படுகிறது என வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே என அஸ்வனி லோகானி தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, மிகப்பெரும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இது தொடர்பாக ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோகானி சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் அவர், ‘தற்போதைய நிதி நெருக்கடியில் மத்திய அரசு தலையிட்டு ஏர் இந்தியாவின் நிதி நிலைமையை மேம்படுத்தாவிட்டால் விமானங்களை நிலையாக இயக்க முடியாத நிலை ஏற்படும்’ என கூறியிருந்தார். இதனால் ஏர் இந்தியா விமான நிறுவனம் மூடப்படும் என தகவல் வெளியானது.

ஏர் இந்தியா தலைவர் அஸ்வனி லோகானி

இதற்கு அஸ்வனி லோகானி மறுப்பு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படுகிறது அல்லது இயக்கம் நிறுத்தப்படுகிறது என வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அவை அடிப்படை ஆதாரமற்றவை. ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ந்து பறக்கும். இந்த நிறுவனம் விரிவுபடுத்தப்படும். எனவே பயணிகள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகள் அச்சப்பட தேவையில்லை. தேசிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, இந்தியாவின் மிகப்பெரும் விமான நிறுவனமாக இன்னும் நீடிக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.