சிறுபான்மைக் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி- ஐ.தே.க

245 0

சிறுபான்மையினக் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யவே, அரசாங்கம் புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்து வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனுஷ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் உள்ளதா என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியெல்லாம் கட்சியில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. நாம் ஐக்கிய தேசியக் கட்சியினராக ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவின் தலைமையில் சிறப்பாக செயற்படுவோம்.

இதில் குழப்பங்கள் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாம் நினைவுப்படுத்தியவுடன்தான் அந்தத் தரப்பினர் இவ்வாறான கதைகளைக் கூறி வருகிறார்கள்.

நாம்  இராணுவத்தினருக்கு எதிராக செயற்பட்டதாக இந்த அரசாங்கத் தரப்பினர், கடந்த காலங்களில் எம்மீது குற்றம் சுமத்தினார்கள்.

தற்போதும் இராணுவத்தினருக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றையெல்லாம் இந்த அரசாங்கம் நிவர்த்தி செய்யுமா என நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆட்சிக்கு வந்தவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரட்னவை கைது செய்தார்கள். இந்த அரசியல் பழிவாங்கலில் இருந்து மக்களை திசைத் திருப்ப, தற்போது பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளார்கள்.

இதுதான் இவர்களது ஜனநாயகம். இந்த நிலையில், 19 ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைக்கவும் அரசாங்கம் முயற்சி செய்து வருகிறது.

அதாவது, அண்ணணிடம் அதிகாரம் இருப்பதை தம்பி விரும்பவில்லை. இதுதான் உண்மையாகும். இதன் ஊடாக, சிறுபான்மையினக் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் இல்லாது செய்யவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

இதுதொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். சர்வாதிகார ஆட்சியை நாட்டில் நிலைநாட்டவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றுக்கு எதிராக நாம் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம். இதில் எவ்வித மாற்றங்களும் இல்லை.  இவர்கள் மக்களை முட்டாளாக்கும் முயற்சியில்தான் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.