சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது 69 இலட்ச பெரும்பான்மை பௌத்த மக்களின் கோரிக்கையாக காணப்படுகின்றது. நாட்டின் தாய் மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் மாதம் இடம் பெறவுள்ள 83 வது சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதற்கு தீரமானிக்கப்பட்டதாகவும், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதாகவும் மாறுபட்ட கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் குறிப்பிட்டுக் கொள்ளப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை.
ஒரு நாட்டில் எந்த சமூகம் அதிகமாக அதாவது பெரும்பான்மையினராக காணப்படுகின்றார்களே அவர்களது மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது சாதாரண விடயமாகும். எமது அயல்நாடான இந்தியாவிலும் இந்நிலைமையே காணப்படுகின்றது. இந்தியாவில் 18ற்கும் அதிகமான மொழிகளை பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் ஆனால் தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் ஒருமொழியில் மாத்திரமே பாடப்படுகின்றது. இவ்விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எவ்வித பிரச்சினைகளும் அங்கு தோற்றம் பெறவில்லை.
இலங்கையில் பெரும்பான்மை சமூகமாக சிங்கள பௌத்தர்கள் வாழ்கின்றமையினால் தேசிய கீதம் சிங்கள மொழியில் ஆரம்பத்தில் இயற்றப்பட்டு தேசிய , அரச நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட்டது , ஆனால் 2015ஆம் ஆண்டு தொடர்ந்து பின்பற்றி வந்த விடயம் மாற்றியமைக்கப்பட்டன. இதுவே இன்று பலதரப்பு சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்பட வேண்டும் என்பது 69 இலட்ச பெரும்பான்மை மக்களின் பிரதான கோரிக்கையாக காணப்படுகின்றது. இவர்களின் சாதாரண கோரிக்கைக்கு கவனம் செலுத்துவது புதிய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகவும் காணப்படுகின்றது. ஆகவே எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும் என்றார்.

