புதுவருட தினத்தையொட்டி வத்திக்கானின் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த போது கரத்தை பலவந்தமாக பிடித்து இழுத்த பெண்ணின் கரத்தை அடித்தமைக்கு பாப்பரசர் பிரான்சிஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பாப்பரசர் பிரான்சிஸ் புதுவருட தினத்தையொட்டி வத்திக்கானின் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த கூட்டத்தினருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் சென்றபோது கூட்டத்திலிருந்த பெண்ணொருவர் தன்னைக் கடந்து சென்ற பாப்பரசரின் கரத்தை ஆர்வம் மிகுதியால் பற்றி தன் பக்கம் இழுத்துள்ளார்.
இதன்போது அந்தப் பெண்ணின் பிடியிலிருந்து தனது கரத்தை பலவந்தமாக விடுவிக்கப் போராடிய பாப்பரசர் அது முடியாமல் போகவும் சினமடைந்த நிலையில் அந்தப் பெண்ணின் கரத்தை தனது கரத்தால் அடித்து தட்டி விட்டு தனது கரத்தை விடுவித்துள்ளார்.

கரம் விடுவிக்கப்பட்ட நிலையிலும் பாப்பரசர் கோபம் தணியாது இருப்பது அந்நிகழ்வில் படமாக்கப்பட்ட காணொளி நேற்றைய முன்தினம் (31.12.2019) வைரலானது.
இந்நிலையில்,புத்தாண்டு தினத்தில் வத்திக்கானின் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் உரையாற்றியபோது, பாப்பரசர் பிரான்சிஸ் “ நாம் பல முறை பொறுமையை இழக்கிறோம். இது எனக்கும் நடக்கிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த மோசமான செயலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “,என்று அவர் தெரிவித்துள்ளார்.

