சீனாவில் சுரங்கப்பாதை விபத்தில் 4 பேர் பலி

324 0

சீனாவில் சுரங்கப்பாதை விபத்தில் அதில் பணியாற்றிய 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.சீனாவின் வடக்கு பகுதியில் ஜான்ஷி மாகாணம் ஜின்செங் நகரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மேல் தளத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இது பற்றி தெரியவந்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக இறந்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேசமயம் மற்ற 2 தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.