ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள தலிபான்கள் சமாதனப் பேச்சு தொடர்பான தகவல்களை மறுத்ததுடன் போர்நிறுத்தம் தொடர்பான திட்டம் ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 18ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.

அதன் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளின் தலையீட்டின் பேரில் உள்நாட்டுப் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவர ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகள் இடையே நடந்த சிலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
தற்போது ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையில் நிரந்தரமான போர்நிறுத்தத்துக்கான சமரச ஒப்பந்தம் தயாராகியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் செய்வது தொடர்பான திட்டம் ஏதுமில்லை என தலிபான்கள் இன்று வெளியிட்ட அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.

