மட்டக்களப்பு திருச்செந்தூரில் நினைவுகூரல்!

241 0

இலங்கையில் கோரத் தாண்டவத்தினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) காலை பல்வேறு நினைகூரல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலை காரணமாக அதிக உயிரிழப்பினை எதிர்கொண்ட மட்டக்களப்பு திருச்செந்தூர் பகுதியில் உள்ள சுனாமி நினைவுத்தூபியில் இன்று (புதன்கிழமை) காலை நினைகூரல் நிகழ்வு உணர்வூர்வமாக நடைபெற்றது.

சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியருகே நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழிபாடுகள் நடத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுத் தூபியில் சுடர் ஏற்றப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இன்று காலை திருச்செந்தூர், நாவலடிப் பகுதிகளிலும் ஆழிப்பேரலை நினைகூரல்  நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.