110 பேரை மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வைத்த மதுரை பெண்: வீடு, வீடாக சர்வே செய்து விழிப்புணர்வும் செய்கிறார்

191 0

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர், சேவை அடிப்படையில் 450 வீடுகளில் தன்னார்வமாக சர்வே செய்து, அவர்களில் 110 பேரை மழைநீர் சேகரிப்பு அமைக்க வைத்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு அமைக்காத வீடுகளை கணக்கெடுத்து, அவர்கள் அமைக்க வைக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மதுரை மாநகராட்சியில் 60 சதவீதம் கட்டிடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருக்கிறது. மீதி கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்தும், பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பதாக தெரியவில்லை. தற்போது மழையும் ஒரளவு பெய்துவிட்டதால் மக்களிடம் மழைநீர் சேகரிப்பு அமைக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது.

இந்நிலையில் 22வது வார்டில் பாஸ்டியன் நகரில் வசிக்கும் ஜாய் மோகன் என்ற பெண், தன்னார்வமாக சேவை மனப்பான்மையில் ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று மழைநீர் சேகரிப்பு சர்வே செய்கிறார்.

இதுவரை 520 வீடுகளுக்கு சென்று, அவர்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு இருக்கிறதா? இல்லையா? என்று ஆய்வு செய்துள்ளார். சர்வேக்கு செல்லும்போது, மழைநீர் சேகரிப்பு இருந்து பயன்படுத்தாவிட்டால் அவர்களை பயன்படுத்த வைக்கவும், அமைக்காதவீடுகளில் அமைக்க வைக்கவும் இவர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு செய்தார். இவரின் இந்த முயற்சிக்கு தற்போது ‘கை’ மேல் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை இவர், தான் சர்வே செய்த வீடுகளில் 110 பேரை மழைநீர் சேகரிப்பு அமைக்க வைத்துள்ளார். இவரது சேவையை அறிந்த மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நேரில் அழைத்து பாராட்டினார்.

அவர் சேவையை ஊக்கப்படுத்தி, அவரை தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு சேகரிக்க வைக்கவும், மழைநீர் சேகரிப்பு அமைக்காத வீடுகளில் அவர் மூலம் மாநகராட்சியின் விழிப்புணர்வு ‘நோட்டீஸ்’ வழங்கும் கவுரவத்தை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜாய் மோகன் கூறுகையில், ‘‘என்னோட வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பில் கிடைக்கும் தண்ணீரைதான் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறேன். கடந்த ஆண்டு அக்கம், பக்கத்தினர் அனைவரும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்தபோது நான் மட்டும் சேமித்து வைத்த தண்ணீரை தாராளமாக பயன்படுத்தினேன்.

என்னோட தேவைக்கு போக மீதி தண்ணீரை மற்றவர்களுக்கு கொடுத்தேன். நான் பெற்ற இந்த பயனை, மற்றவர்களையும் பெற வைக்க வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு செய்கிறேன்.

காலையில் 10 மணிக்கு சர்வே செய்ய வீட்டில் இருந்து புறப்படுவேன். மதியம் 3.30 மணிக்குதான் திரும்பி வருவேன். என்னோட கணவர் இந்தியன் வங்கி மானேஜராக இருந்தார். அவர் இறந்துவிட்டார்.

ஒரு மகனும் திருமணம் செய்து சென்னையில் உள்ளார். என்னோட அன்றாட வாழ்க்கைக்கு போதுமான வசதி உள்ளது. அதனால், என்னோட வாழ்க்கையில் மீதமுள்ள நாட்களை சமூகத்திற்காக செலவிடவே இந்த சேவையில் ஈடுபடுகிறேன்.

என்னோட சகோதரர் சேவியர் பிரிட்டோ சென்னையில் தொழில் முனைவோராக உள்ளார். அவரும், நானும் சேர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தமுடியாத கஷ்டப்படுகிற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கும் உதவி செய்கிறோம். ஒவ்வொரு வருஷமும், 2 ¼ லட்சம் வரை உதவி செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறோம். இந்த வருஷம் மட்டும் இதுவரை 17 பேர் பயனடைந்துள்ளனர், ’’ என்றார்.