சென்னை உள்பட 10 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

185 0

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதற்கட்டமாக விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு முதற்கட்டமாக விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002-ம் கல்வி ஆண்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது.

பின்பு, 2005-2006-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவு மாணவ- மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தினை சீரிய முறையில் தொடர்ந்து செயல்படுத்திடும் விதமாக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2019-20-ம் கல்வியாண்டிற்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 9 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், வி.எம்.ராஜலட்சுமி, க.பாண்டியராஜன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அந்த மாவட்டங்களில் தேர்தல் முடிந்தவுடன் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும். தேர்தல் நடைபெறாத 10 மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின்னர் வகுப்புகள் திறந்தவுடன் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.