குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை- முதல்வர் பழனிசாமி

277 0

குடியுரிமை சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கல்லூரி மாணவர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்துக்கு தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக இந்த சட்டம் இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களிடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புகின்றனர். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பதற்றத்தை எற்படுத்த முயற்சிக்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன். சிறுபான்மை மக்களுக்கு எக்காலத்திலும் எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக அதிமுக அரசு இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.