குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக் கோரி சென்னையில் ரயில் மறியல், முற்றுகை மாணவர்கள் உட்பட 400 பேர் கைது

180 0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆளுநர் மாளிகைமுற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு தலைமையில் சைதாப்பேட்டை சின்னமலையில் இருந்துஆளுநர் மாளிகை நோக்கி சென்றபேரணியில் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தலைவர்கள்உட்பட 25-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி

இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற நல்லகண்ணுசெய்தியாளர்களிடம் கூறும்போது,“பாஜக அரசு மக்கள் கருத்தைக்கேட்காமல் பெரும்பான்மையை வைத்து சர்வாதிகார ரீதியில் குடியுரிமை சட்டத்தில் திருத்தத்தைநிறைவேற்றி இருக்கிறது. சட்டத்திருத்தம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது. இஸ்லாமியர்களை தனிமைப்படுத்துவது ஜனநாயகத்துக்கு எதிரானது. இலங்கை தமிழர்கள், தமிழர்கள் என்பதால் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி நடப்பதாக பார்க்கிறார்கள். இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும்” என்றார்.

இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற இந்தியமாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்டஅமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சமூக நலக்கூடம், திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களில் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல், ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சென்னைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சட்டத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார். மேலும், சுமார் 100 பேர் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.