சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய புதியதாக எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் உள்ள வீடுகளுக்கு இப்போது 3 சக்கர சைக்கிள்களில் சென்று ஊழியர்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களை சப்ளை செய்து வருகிறார்கள்.
இதனால் சிலிண்டர் சப்ளை செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. அதோடு ஊழியர்களும், சைக்கிள் மிதித்து வீடுகளுக்கு செல்ல சிரமப்படுகிறார்கள்.
சமையல் கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்ய புதியதாக எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆட்டோக்களில் ஊழியர்கள் சிலிண்டர்களை விரைவாக சென்று சப்ளை செய்ய முடியும். மேலும் இதற்காக அவர்களுக்கு கூடுதல் செலவும் ஆகாது. இந்த ஆட்டோக்களில் 400 முதல் 450 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை ஏற்றிச் செல்லலாம். இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தபட்சம் 20 முதல் 30 சிலிண்டர்கள் எடுத்துச் செல்ல முடியும்.
சென்னை நகரில் பெரும்பாலான தெருக்கள் மிகவும் குறுகியதாக இருக்கும். எலெக்ட்ரிக்கல் ஆட்டோக்களில் இந்த தெருக்களுக்குள் எளிதாக செல்ல முடியும். சிலிண்டர்களையும் உடனடியாக சப்ளை செய்யலாம்.
தற்போது 3 சக்கர சைக்கிளில் சென்று சிலிண்டர் சப்ளை செய்வோர் ஒரு நாளுக்கு 2 முறை மட்டுமே ஏஜென்சிகளில் இருந்து சிலிண்டர்களை எடுத்து செல்கிறார்கள். எலக்ட்ரிக்கல் ஆட்டோ முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்போது ஒரு ஊழியர் ஒரு நாளில் 4 முறை வரை சிலிண்டர்களை சப்ளை செய்ய முடியும். இதன் மூலம் வீடுகளுக்கு காலதாமதமின்றி சிலிண்டர்கள் கிடைக்கும்.
தமிழகத்தில் 2.14 கோடி சமையல் கியாஸ் இணைப்புகள் உள்ளது. இதில், 1.17 கோடி இணைப்புகள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் உள்ளது. இவர்கள்தான் பெரும்பாலான கியாஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு சப்ளை செய்து வருகிறார்கள்.
சிலிண்டர்கள் காலதாமதமாக வருவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு அடிக்கடி புகார் வந்ததை தொடர்ந்து சிலிண்டர் சப்ளை செய்வோருக்கு எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களை வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னை கொரட்டூரில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மாநகர் முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எலக்ட்ரிக்கல் ஆட்டோ மூலம் சப்ளை செய்யப்படும்.
எலக்ட்ரிக்கல் ஆட்டோக்களில் ஆயிரம் வாட் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதனை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் ஓடும். இதன் மூலம் குறைந்த செலவில் சென்னையை சுற்றி வர முடியும்.
சென்னையில் இப்போது 200-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் எலெக்ட்ரிக்கல் ஆட்டோவிற்கு மாற உள்ளனர். இந்த ஆட்டோக்கள் இப்போது டெல்லியில் பயன்பாட்டில் உள்ளது.

