திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம்

328 0

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தையன்கோட்டையை சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்த பின் பேரணியாக கிளம்பி ஊர்வலமாக மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டவாறு வந்தனர். இவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேரணியாக வந்த 500க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

பழனியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்துரோடு ரவுண்டானா அருகே நடந்த போராட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜப்பார் தலைமை தாங்கினார்.

சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மோகன், வினோத், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அமைதியாக நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர்.

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அனைத்து முஸ்லிம் ஜமா அத் தலைவர் அப்துல் மஜீத் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்கையன்கோட்டை ரவுண்டா பிரிவில் திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.