செனட் சபையில் பதவி நீக்க தீர்மானம் மீது உடனடி விசாரணை – டிரம்ப் வலியுறுத்தல்

264 0

தன் மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக உடனடியாக செனட் சபையில் விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அடுத்த கட்டமாக செனட் சபைக்கு அனுப்பப்பட இருக்கிறது.

எனினும், செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக இருப்பதால் அங்கு இந்த தீர்மானம் தோற்கடிக்கப்படும் என்றும், டிரம்பின் பதவிக்கு ஆபத்து இருக்காது என்றும் நம்பப்படுகிறது. எனவே டிரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டிய பிறகு அவர் மீதான பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பி வைப்போம் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தன் மீதான பதவி நீக்க தீர்மானம் தொடர்பாக உடனடியாக செனட் சபையில் விசாரணை நடத்த வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது-

செனட் சபையில் எனக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை முன்மொழிய, ஜனநாயக கட்சியினரிடம் வக்கீல்கள், சாட்சிகள் என எதுவும் இல்லை. இருப்பினும், சபையின் நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்று மட்டும் விரும்புகின்றனர்.

உண்மையில், அவர்கள் எனக்கு எதிராக ஒரு ஆதாரம் கூட வைத்திருக்கவில்லை. எனவேதான் எனக்கு எதிராக அவர்களால் ஒரு ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. நான் வெளியேற வேண்டும் என்று மட்டும்தான் ஜனநாயக கட்சியினர் விரும்புகிறார்கள். எனவே அவர்களின் சதியை முறியடிக்க என் மீதான பதவி நீக்க தீர்மானம் மீது உடனடி விசாரணை தேவை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.