முரசொலி நிலவிவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மீது எழும்பூர் கோர்ட்டில் தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறிய கருத்துக்கு தி.மு.க. சார்பில் அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த சீனிவாசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க. சட்டத்துறை முடிவு செய்தது.
அதன்பேரில் எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார். அவருடன் தி.மு.க. வக்கீல்கள் என்.ஆர்.இளங்கோவன், இரா.கிரிராஜன் ஆகியோரும் வந்திருந்தனர்.
நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்பான மனுவை கொடுத்த போது அத்துடன் முரசொலி நிலம் தொடர்பான ஆவணங்களையும் இணைத்து கொடுத்தனர்.
பின்னர் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த தலைவர் கருணாநிதியின் மூத்த பிள்ளை என்றழைக்கப்படும் முரசொலி மீது அவதூறாக பேசிய டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் தாங்கள் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினோம்.
ஆனால் அந்த நோட்டீசுக்கு இருவரும் பதில் அளிக்காத காரணத்தால் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தோம்.
இன்றைக்கு நீதிமன்றத்தில் அதற்குரிய பிரமாண வாக்குமூலத்தையும், 83 ஆண்டுகளுக்கான விவரங்கள், மூலப்பத்திரம் ஆகியவை முரசொலி அறக்கட்டளை சார்பாக தாக்கல் செய்துள்ளோம்.
அவர்கள் இருவரும் கவுரவம் பார்க்காமல் மன்னிப்பு கோரினால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு இந்த வழக்கை வாபஸ் பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மனு மீதான வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 24-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளி வைத்தார்.

