குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

356 0

குடியுரிமை திருத்த சட்டம் மொழி சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டும் அல்ல, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே விரோதமானது எனக் கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘இந்திய அரசியலமைப்பு சட்டம், மதம் சார்ந்த மற்றும் மொழி சிறுபான்மையின மக்களுக்கு சட்டரீதியாக சிறப்புரிமையுடன் கூடிய பாதுகாப்பை வழங்கிஉள்ளது.

ஆனால் அதை புறம்தள்ளிவிட்டு மத்திய அரசு தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வைத்துஇந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கடந்த டிச.12 அன்று கொண்டு வந்துள்ளது. இது இந்தநாட்டின் மதசார்பற்ற மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது.

இந்த சட்டத்துக்கு குடியரசுத்தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளதால் உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்துஇந்தியாவில் குடியேறியவர்களுக்கு புதிதாக குடியுரிமை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்து இருப்பது இந்திய ஜனநாயகத்துக்கே எதிரானது.

இந்தியாவில் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அனைவரையும் ஒரே அளவுகோளுடன் பார்க்க வேண்டும். இந்தியாவை ஒருசாரார் வாழும் நாடாக மாற்றிவிட முடியாது. அதேபோல இலங்கை தமிழர்களையும் புறம் தள்ளிவிட முடியாது.

பொருளாதார காரணங்களுக்காகவே பலர் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடிபுகுந்துள்ளனர். எனவே எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த சட்ட திருத்தம், அரசியலமைப்பு சட்டத்தின் சாசனப்பிரிவுகள் 14 மற்றும் 21 ஆகியவற்றுக்கு முற்றிலும் எதிரானது. இதன்மூலம் தேசத்தின் பொது அமைதிக்கும் மத்திய அரசு பங்கம் விளைவித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். அதேபோல இந்த சட்டத்தை செயல்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.