மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் – ஐகோர்ட்

291 0

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.மாமல்லபுரத்தை அழகுபடுத்தி, பாதுகாக்க வேண்டும் என்றும் இதற்கு தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன் கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தையே மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரிக்க உத்தரவிட்டார்.

இதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்ய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ‘ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டும், இதுவரை தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கை வருகிற ஜனவரி2-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால், மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட நேரிடும்’ என்று உத்தரவிட்டனர்.