பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – ரோஹித அபேகுணவர்தன

279 0

ஐக்கிய தேசிய கட்சியை ஜனாதிபதி தேர்தலின் ஊடாக புறக்கணித்த மக்கள் மீண்டும் பொதுத்தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள்.

 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்று நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கான திட்டம் முறையாக வகுக்கப்பட்டுள்ளதாக  சக்தி வலு  இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கம்  மக்களுக்காக செயற்படவில்லை மாறாக ஐக்கிய தேசிய கட்சிக்காக மாத்திரம் செயற்பட்டது. கட்சிக்குள் பதவிக்கு ஆரம்ப காலத்தில் இருந்து போட்டித்தன்மை காணப்பட்டது. அது இன்றும் தொடர்கின்றது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி பொதுத்தேர்தலுக்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.   ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை புறக்கணித்த மக்கள் மீண்டும் ஆதரவு  வழங்க மாட்டார்கள்.

2015ம் ஆண்டு நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் செய்த தவறினை இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் ஊடாக திருத்திக் கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறே  பொதுத்தேர்தலிலும் கிடைக்கப் பெறும்.

பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலத்தை கொண்டு நிலையான அரசாங்கத்தினை நிச்சயம் அமைக்க முடியும் அதற்கான திட்டங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தரப்பினர் ஊடாக வகுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் மீது முழுமையான நம்பிக்கை காணப்படுகின்றது. மீண்டும்  கடந்த நான்கரை வருட பலவீனமான அரசாங்கத்தை தோற்றுவிக்கமாட்டார்கள்.

இடைக்கால அரசாங்கம் குறுகிய காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. மக்களுக்கு  நிவாரணம் வழங்கும் பணிகளும் ஆரம்ப கட்டத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது ஜனவரி மாதம் தொடக்கம் அனைத்து துறைகளின் ஊடாகவும்  பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்  பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.