தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரித்த பெண்!

413 0

கிளிநொச்சி விவேகானந்த நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும், இதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபா பணம் தேவை என குறித்த பெண் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகளை வெளியிட்டு பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் கடந்த சில மாதங்களாக ஈடுப்பட்டு வருவதாகவும், தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் தெரிவித்து அவர் காண்பிக்கும் ஆவணங்கள் போலியானவை எனவும் கடந்த 17-09-2019 அன்று கருப்பை கழுத்து புற்றுநோய் காரணமாக மரணமடைந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மதியாபரனம் லதா வயது 46 என்வருடைய மருத்துவ அறிக்கையினை போட்டோ பிரதி எடுத்து அதில் தன்னுடைய பெயரையும் வயதினையும் மாத்திரம் மாற்றம் செய்து இவ்வாறு பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார் எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்னார்.

கடந்த ஏப்ரல் மாதம் யாழ் போதனா வைத்தியசாலையில் தனக்கு தொண்டையில் ஏதோ இருக்கிறது. சாப்பிடும் போது தடுக்கிறது என்று கூறி பரிசோதனை செய்துள்ளார். அவருக்கு ENT பரிசோதனை செய்த போது எவ்விதமான பிரச்சினையும் இல்லை என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்தோடு இவர் எக்காலத்திலும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்குச் சென்று எந்த சிகிச்சையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது அங்குள்ள பதிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் இணையத்தளங்களுக்கும் , சமூக வலைத்தளங்களுக்கும் அனுப்பியுள்ள மருத்துவ அறிக்கைளில் ஒன்று இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெறப்பட்ட ஒரு வயது பிள்ளை ஒன்றின் மருத்துவ அறிக்கையாகும்.

அத்தோடு மிக முக்கியமானது தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனத் தெரிவித்து காண்பிக்கும் ஆவணங்கள் அனைத்தும் ஏற்கனவே கருப்பைகழுத்து புற்று நோய் காரணமாக இறந்த மதியாபரனம் லதா என்பவருடைய மருத்துவ அறிக்கைகளும் அவர் அதற்காக பெற்ற சிகிசைகள் அடங்கிய அறிக்கைகளே. எனவே இந்த ஆவணங்கள் அனைத்தும் கருப்பைகழுத்துப் புற்றுநோய் காரணமாக இறந்த கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு திணைக்கதளத்தில் பணியாற்றிய மதியாபரனம் லதா என்பவருடையதே.

இதனைத்தவிர லதா மதியாபரனம் என்பவருடைய கிளினிக் கொப்பியில் லதா என்ற பெயரை அழித்துவிட்டு ராகினி என தன்னுடைய பெயரை மாத்திரம் மாற்றியிருகின்றார். மாற்றம் செய்யப்பட்டமை தெளிவாக தெரிகிறது. அத்தோடு திருமணம் செய்யவில்லை எனத் தெரிவிக்கும் அவர் லதாவின் கிளினிக் கொப்பிகளில் உள்ள திருமதி என்பதனையும் மாற்றம் செய்யாது விட்டிருக்கின்றார். மேலும் இவருக்கு வயது 33 ஆனால் இவர் காண்பிக்கும் லதாவினுடைய ஆவணங்களில் அவரது வயது 46 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதியாபரனம் லதா மற்றும் ராகினி தனபாலாசிங்கம் மற்றுமொருவர் மூவருமாக நிதி நிறுவனம் ஒன்றின் நுண்கடன் குழுவொன்றில் அங்கும் வகின்றனர்.இதன் மூலம் லதாவுடன் ராகினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் லதா புற்றுநோய்க் காரணமாக கடந்த 17-09-2019 இன்று இறந்த பின்னர் சில நாட்களில் லதாவின் வீட்டுக்குச் சென்ற ராகினி தனக்கும் புற்றுநோய் இருக்கிறது எனத் தெரிவித்து லதாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் தனக்கும் ஏற்பட்டுள்ளதா என ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் அதற்காக அவரது கிளினிக் கொப்பியை தருமாறும் கோரி பெற்றுச்சென்று அதனை போட்டோ பிரதி எடுத்துள்ளார். அந்த போட்டோ பிரதியிலேயே தனது பெயரை மாற்றம் செய்து மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றார்.என்பது உறுதியாகியுள்ளது.

குறித்த பெண்ணின் போலி ஆவணங்களை தங்களது இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரசுரிப்பவர்கள் அவதானமாக பொறுப்புடன் செயற்பட வேண்டும். இவ்வாறான மோசடியில் ஈடுப்படுகின்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உண்மையில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்ய முடியாத நிலை ஏற்படும் அத்தோடு குறித்த பெண்ணுக்கு தொண்டை புற்றுநோய் அவருக்கு உதவி செய்யுங்கள் என உறுதிப்படுத்தி கடிதம் வழங்கும் அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகளும் அவதானமாக இருக்க வேண்டும்.

என்பதோடு தற்போது அரச மருத்துவனைகளில் இவ்வாறான நோய்களுக்கு உரிய சிகிசை வழங்கப்படுகிறது. எனவே இந்த நிலையில் இவ்வாறான பெண்கள் போலியாக பணம் சேகரிப்பதற்கு மேற்கொள்ளும் இந் நடவடிக்கை மூலம் வைத்தியசாலையின் பெயர் பாதிக்கப்படுவதோடு, உண்மையாகவே பாதிக்கப்பட்டு உதவி கோரி நிற்பவர்களும் உதவி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.