சஜித்தை எதிர்க்கட்சி தலைவராக நியமித்துள்ளமை ‘ தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போன்றது!

242 0

ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறியாமல் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக சஜித் பிரேமதாசவை கொண்டுவந்திருப்பது தலைவலிக்கு தலையனையை மாற்றுவது போலாகும் என ஆளும் கட்சி உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்திருக்கின்றது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியை கடும்போராட்டத்துக்கு மத்தியிலே அவர் பெற்றிருக்கின்றார். அதனால் அந்த பதவியில் அவர் நீண்டகாலம் இருக்கவேண்டும் என நான் பிராத்திக்கின்றேன். அதேபோல் நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகித்தவர் என உலக சாதனைக்கு உரிமைகோரும் ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை சஜித் பிரேமதாசவுக்கு முறியடிக்க முடியுமாகவேண்டும் எனவும் பிராத்திக்கின்றேன்.

அத்துடன் ரணில் விக்ரசிங்கவுக்கு பதிலாக சஜித் பிரதேமதாசவை கொண்டுவருவதன் மூலம் அவரகளின் வாக்குகளை அதிகரித்துக்கொள்ளலாமா?. ஜனாதிபதி தேர்தலிலும் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிட இருந்தார்.

என்றாலும் சஜித் பிரேமதாச வந்தால் தேர்தலில் வெற்றிபெறலாம் என கடும் போட்டிக்கு மத்தியிலே வேட்பாளர் பதவி பெற்றுக்கொள்ளப்பட்டது.

என்றாலும் சஜித் தோல்வியடைந்தார். ரணில் விக்ரமசிங்க தேர்தல்களில் தோல்யடைந்ததையும் பார்க்க மிகவும் மோசமான முறையிலே சஜித் பிரேமதாச தோல்வியடைந்தார். அதனால் தேர்தல் தோல்விக்கு உண்மையான காரணத்தை அறியாமல் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கொண்டுவருதில் எந்த பயனும் இல்லை.

மேலும் நாட்டு மக்கள் ரணில் விக்ரமசிங்கவை நிராகரித்தது, அவர்  வயதானவர் என்றோ, அவர் கோர்ட் அணிவதாலோ அல்ல.

மாறாக அவரின்  கொள்கை மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களாலே அவர் நிராகரிக்கப்படுவதற்கு காரணமாகும்.

அதனால் மேற்கத்திய சாயல், சிங்கள விரோத  கொள்கையை மாற்றிக்கொள்ளாமல், அவரை சுற்றி இருக்கும் சுமந்திரன், அடிப்படைவாதி றிஷாத்,பொய் சொல்லும் சம்பிக்க, பொய்க்கே பிறந்திருக்கும் ராஜித்த மற்றும் மேற்கத்திய கொள்கையில் இருக்கும் மங்கள போன்றவர்களுடன் சஜித் பிரேமதாச வந்தாலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்ட தலை எழுத்தே சஜித் பிரேமதாசவுக்கும் ஏற்படும். அதுதொடர்பில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.