அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயம் பாதுகாக்கப்படுமா?

339 0

அழிவின் விளிம்பில் உள்ள வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க வேளாண் துறை உதவி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். வெற்றிலை சாகுபடி செய்ய முதலில் விவசாய நிலத்தை பக்குவப்படுத்தி, தண்ணீர் பாய்ச்ச 2 அடி ஆழத்துக்கு பள்ளம் வெட்டுகின்றனர். மேடான பகுதியில் அகத்தி விதைகளை விதைக்கின்றனர். அகத்தி விதைத்த 45 நாட்கள் கழித்து, வெற்றிலைக் கொடிகளை நடவு செய்கின்றனர். அதில் இருந்து 5 மாதம் கழித்து வெற்றிலை அறுவடை செய்யத் தொடங்குகின்றனர். அகத்தி செடியில் வெற்றிலை கொடிகளை படர விடுகின்றனர். மாதம் ஒரு நாள் வீதம் வெற்றிலை பறித்து, விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் பாலு, முருகன் ஆகியோர் கூறியதாவது: வெற்றி லைக் கொடியில் இருந்து 3 ஆண்டுகள் வரை வெற்றிலை பறிக்கலாம். ஆனால், வறட்சி, மழை, நோய்த் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் 2 ஆண்டுகள் வரை வெற்றிலை பறிப்பதே அரிதாக உள்ளது.

ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 4 தலைமுறைகளாக விவசாயிகள் பலர் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், இளம் தலைமுறையினருக்கு வெற்றிலை விவசாயத்தில் ஆர்வம் இல்லை. முன்பெல்லாம் முகூர்த்த தினங்களில் வெற்றிலைக்கு நல்ல விலை கிடைக்கும். அனைத்து திருமண வீடுகளிலும் தாம்பூலத்தில் வெற்றிலை பயன்படுத்தியதே அதற்கு காரணம். இப்போது தாம்பூலத்துக்கு வெற்றிலை பயன்படுத்துவதே அரிதாக இருக்கிறது. பிஸ்கெட், சாக்லெட் என பல்வேறு பொருட்களை தாம்பூலத்துக்கு கொடுக் கின்றனர்.

அதனால், வெற்றிலைக்கு போதுமான விலை கிடைப்பதில்லை. லட்சக்கணக்கில் முதலீடு செய்தும், போதிய வருவாய் கிடைப்பதில்லை.

நெல், வாழை, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால்,வெற்றிலை சாகுபடி செய்ய கடனுதவி வழங்கப்படுவதில்லை. வறட்சி, மழைபோன்ற இயற்கை பாதிப்புகளால் ஏற்படும் இழப்புகளுக்கும் நிவாரணம்வழங்கப்படுவதில்லை. பல மாவட்டங் களில் வெற்றிலை சாகுபடி அழிந்து வருகிறது. மதுரை, திருச்சி மாவட்டங்களில் வெற்றிலை விவசாயத்தில் வேலை கிடைக்காததால், சுமார் 30 விவசாய தொழிலாளர்கள் ஆய்க்குடியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஆய்க்குடி பகுதியிலும் 30 வயதுக்கு உட்பட்ட யாரும் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபடவில்லை. அடுத்த தலைமுறை யினர் வெற்றிலை விவசாயத்தை கைவிடும் நிலையில் உள்ளனர்.

கடனுதவி தருவதில்லை

வெற்றிலை விவசாயத்தை பாதுகாக்க சாகுபடி செய்ய கடனுதவி, இயற்கை பாதிப்பால் இழப்பு ஏற்பட்டால் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும். வெற்றிலை பல்வேறு மருத்துவ பயன்களைக் கொண்டது. வெற்றிலையை அரசே விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்து, வெற்றிலைச் சாறு தயாரித்து மருத்துவ உபயோகங்களுக்கு பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தால் வெற்றிலை விசாயத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.