கிழக்கு சிரியாவில் ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதக் கிடங்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள், “சிரியாவின் அபுல்கமால் மாகாணத்தில் உள்ள ஈரானுக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்கில் அடையாளம் தெரியாத நபர்களால் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஈரான் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து இஸ்ரேல் தரப்பிலும் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
இஸ்ரேல்- சிரியா இடையே தீவிரவாதத் தாக்குதல் மற்றும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக அவ்வப்போது இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இரு தரப்பும் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இஸ்ரேலைப் பொறுத்தவரை ஈரானைத் தங்களுக்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாகக் கருதுகிறது. இதனால் ஈரான் ஆதரவு நிலைப்பட்டைக் கொண்ட சிரியா மீது இஸ்ரேல் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

