எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது: நாராயணசாமி

266 0

201611031023568688_narayanasamy-says-nellithope-constituency-cannot-win-admk_secvpfநெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில் எத்தனை கூட்டணி அமைத்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது என்று நாராயணசாமி பேட்டியளித்துள்ளார்.புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் தற்போது இடைத்தேர்தல் நடப்பதால் புதிய திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட முடியாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

முந்தைய என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் 3 மாதங்களாக போடப்படாமல் இருந்த 30 கிலோ அரிசியையும், காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின் போட்டுள்ளோம். இலவச அரிசி திட்டம் நிறுத்தப்படும் என மக்களை திசை திருப்புவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகர் பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.

நெல்லித்தோப்பு தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல் என எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். முன்பு முதல்-அமைச்சராக இருந்த சண்முகம் தேர்தலில் போட்டியிடவில்லை.

அப்போது ஏனாம் எம்.எல்.ஏ. மல்லாடி தனது பதவியை ராஜினாமா செய்து சண்முகம் நிற்க வழிவகுத்தார். சண்முகம் அமைச்சரவையில் அப்போது ரங்கசாமி கல்வி அமைச்சராக இருந்தார். அந்த தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தலாக அவருக்கு இல்லாத போது நெல்லித்தோப்பு தேர்தல் மட்டும் எவ்வாறு திணிக்கப்பட்ட தேர்தலாகும்?

10-ந் தேதிக்கு மேல் முக்கிய தலைவர்கள் புதுவைக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மாநில வளர்ச்சிக்கு பாடுபடும்.

கூட்டணி கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். புதுவையின் வளர்ச்சிதான் எங்களுக்கு முக்கியம்.

அமைதியான முறையில் இந்த தேர்தல் நடைபெறும். எங்களுக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாணவர் கூட்டமைப்பு, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. அவர்களுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம்.

அ.தி.மு.க. அணியில் எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் கவலை இல்லை. அவர்கள் வெற்றி பெற முடியாது. தேர்தலில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம். மக்கள் வளர்ச்சிக்கு பாடு படுவோம்.

புதுவையில் தற்போது இடைத்தேர்தலுக்காக 144 தடை உத்தரவு உள்ளது. மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக காவல்துறையிடம் அனுமதி பெற்று இளைஞர் காங்கிரசார் போராட்டம் குறித்து அறிவிப்பார்கள்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.