ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாரிய போராட்டம் -யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்-

278 0

usu-852d-600x338ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமக்கு வழங்கிய வாக்குறுதிகள் டிசெம்பர் மாதம் முதலாம் திகதிக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் வேவ்வோறு வழிகளிலும், பாரிய போராட்டங்களை முன்னெடுப்பார்கள் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்தினை எச்சரிக்கை செய்துள்ளது.
பொலிஸாரின் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த சுலக்ஷன், கஜனுக்காக நீதி கிடைக்கும்வரைக்கும் தாங்கள் ஓயப்போவது இல்லை என்றும் ஒன்றியம் ஜனாதிபதியின் சந்திப்பிற்குப் பின்னரான தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் வித்தியாவின் கொலை தொடர்பாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழிகள் ஒன்று கூட இதுவரையில் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுடைய கொலை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நம்பி நீதிக்கான போராட்டத்தினை கைவிட்டமை சரியா? ஏன கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த மாணவர் ஒன்றியத் தலைவர்:- ஜனாதிபதி எமக்கு ஒரு மாத கால அவகாசத்தினை தந்துள்ளார். ஏனெனில் குறித்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர்தான் அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும், இழப்பீடுகள் வழங்குவது தொடர்பாகவும் முடிவுகளை எடுக்கலாம்.
நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு ஒரு மாத காலம் தேவை என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திவந்த போராட்டத்தினை ஒரு மாத காலம் தற்காலிகமான நிறுத்தி வைப்பதற்கு முடிவுகளை எடுத்துள்ளோம்.
எதிர்வரும் மாதம் டிசெம்பர் முதலாம் திகதிக்குள் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் எமது போராட்டத்தினை பல்வேறு வழிகளிலும், பாரிய அளவில் முன்னேடுப்போம்.
உயிரிழந்த சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகிய இரு மாணவர்களுடைய உயிரிழப்பிற்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு போதும் விலகப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.