ஈரான் மிரட்டல்: டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை

104 0

ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் கலந்தாலோசித்தனர்.

ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது.
சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினும் ஈரானின் மிரட்டல் குறித்து நேற்று வெள்ளை மாளிகையில் கலந்தாலோசித்தனர்.
‘ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்தும் அதே வேளையில் இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது’ என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினும் கடந்த மாதம் 19 தேதியும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, கோலன் ஹைட்ஸ் பகுதியை இறையாண்மை கொண்ட இஸ்ரேல் பிரதேசமாக இணைத்ததன் மூலம், இரு வலதுசாரி தலைவர்களுக்கிடையேயும் வலுவான உறவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.