பர்கினோ பாசோ கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 14 பேர் பலி

69 0

பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கராவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’ என அந்நாட்டு உள்ளூர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பர்கினோ பாசோ நாட்டின் மசூதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.