ரூ.35 லட்சம் பண மோசடி? திருப்பூர் தொழிலதிபரை கடத்தியதாக புகார்

197 0

பின்னலாடை சரக்கு அனுப்பிய வகையில், ரூ.35 லட்சத்தை தராமல் இழுத்தடித்த திருப்பூர் தொழிலதிபரை கடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் வீரபாண்டி மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (46). அதே பகுதியில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். கடன் பிரச்சினை காரணமாக தற்போது நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பின்னலாடை துணிகளை சென்னையைச் சேர்ந்த சரக்கு ஏற்றுமதி நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வந்துள்ளார். அந்த வகையில் அந்நிறுவனத்துக்கு ரூ.35 லட்சம் அளிக்க வேண்டியுள்ளது.

கடந்த சில மாதங்களாக குணசேகரன் பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக குணசேகரன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரின் அலைபேசி அழைப்புகளை எடுக்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு சொந்தமான சொத்துகளை குணசேகரன் விற்க முயற்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த தனியார் நிறுவனத்தினர், திருப்பூர் வந்தனர். அவர்கள் குணசேகரனுக்குரிய வீட்டை விலைக்கு வாங்குவது போல் உள்ளூர் பிரமுகர் ஒருவர் உதவியுடன் பேசி நடித்து, குணசேகரனை அவரது வீட்டருகே வைத்து பிடித்தனர். அவரை காரில் ஏற்றிச் செல்ல முயன்றபோது, அவரது சப்தம் கேட்டு மக்கள் திரண்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து குணசேகரனின் மனைவி வீரபாண்டி காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டு, மாநகராட்சி அலுவலகம் அருகே அவர்களைப் பிடித்தனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல இருந்ததாக தெரிந்தது. பிறகு அனைவரும் வீரபாண்டி காவல் நிலையம் அழைத்து
செல்லப்பட்டனர்.

தனியார் நிறுவனத்தினர் குணசேகரன் பண மோசடி செய்ததாக புகார் தெரிவித்தனர். இருதரப்பு புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், என்றனர்.