கார்த்திகைப் புறநானூறு!

402 0
கார்த்திகைப் பொழுது
வண்ணப்பூச்சியின் சிறகடிப்பில்
காந்தள்பூவின் நறுமணத்தில் வீச்சுறுக்கிறது.

.
ஒவ்வொரு
வீடுகளிலும் ஒளிரும் தியாகச் சுடரில்
பசி மறந்த
அழுகையின் பிரார்த்தனைத் துளிகள்.

.
கல்லறை கல்வெட்டுகளின் மேல்
சிவந்த கண்கள் ஊடே
குழந்தையின் முத்தம் பதியும் உணர்வு.

.
இரத்தம் குடித்து
கவலைகளை கக்கும் கடலின் காற்று
விளை விதைகளில் செந்தளிர்கள்
நம்பிக்கை தரும் வீரத்தை உரைக்கிறது.

.
பதுங்கு குழி வெட்டு முகத்திலிருந்து
எதிரொலிக்கும் அணுங்குதல் சப்தம்
வலி அறிந்த
நினைவிலி தினத்தில் நெஞ்சில் கனக்கும்
சாபத்தை மனம் எரியும் எண்ணப்படம்.

.
மரித்திருக்கும் நிலத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக மீள் திரும்பி
உயிர்ப்பித்து கொள்ளும் உடல்
நிகழ் காலத்தின்
பழிகளை மறக்க பழகிக் கொண்டது.

.
இருளின் கருமையை
விடிய விடிய எண்ணெய் ஊற்றலில்
விளக்கு கொளுத்தி வெளிச்சம் ஊட்டும்
உணர்வின் புறநானுற்று மண்.

கோ. நாதன்.