செவிலியரை தாக்கிவிட்டு தலைமறைவான சிதம்பரம் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

182 0

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியரைத் தாக்கிய தீட்சிதர் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவரை கோயில் நிர்வாகம் 2 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

சிதம்பரம் வஉசி தெருவைச் சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா(51). இவர் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 16-ம் தேதி, இவர் தனது மகன் பிறந்த நாளுக்காக, சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துள்ளார். அப்போது, அங்கிருந்த சிதம்பரம் வடக்கு வீதியைச் சேர்ந்த தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர்(25), பெயர், நட்சத்திரம் முதலியவற்றைக் கேட்காமல் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த தீட்சிதர் திடீரென லதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட லதா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதைத் தொடர்ந்து, லதா அளித்த புகாரின் பேரில் தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண்கள் மீதான வன்கொடுமை ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் சிதம்பரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

2 தனிப்படை தேடுகிறது

இதற்கிடையே நேற்று முன்தினம் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் மணிமேகலை தலைமையிலான நிர்வாகிகள் லதாவை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், அவர்கள் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து, இதில் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு ஒன்றையும் அளித்தனர்.

இதற்கிடையே தீட்சிதர் தர்ஷன் தலைமறைவானார். அவரைப் பிடிக்க சிதம்பர நகர காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள தீட்சிதர், சென்னையில் ஒரு முக்கிய விஐபி வீட்டில் இருந்தபடி, முன்ஜாமின் பெற முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இப்பிரச்சினைக்கு மத்தியில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் கூட்டம் செல்வகணபதி தீட்சிதர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோயிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த செவிலியரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதரை திருக்கோயில் பணியில் இருந்து 2 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்வது, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பது என முடிவு செய்து அறிவித்துள்ளனர்.