சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த ஏ.மாரியப்பன், தென்மண்டல தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்று, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 1989-ம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற மாரியப்பன், 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தகவல் பணியில் சேர்ந்தார். டில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் (ஐஐஎம்சி) பயிற்சி முடித்த பின்னர், அகில இந்திய வானொலியின் கோவை செய்தியாளராக 1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார்.
பின்னர், கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பரில் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் மண்டல செய்திப் பிரிவில் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றார். மண்டல செய்திப் பிரிவில் இணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்று பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு ஜுலை மாதம், சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி வந்த ஏ.மாரியப்பன், மத்திய அரசின் கூடுதல் செயலர் அந்தஸ்தில் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்று, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டலத் தலைவராக நேற்று பதவியேற்றார்.

