ஜனாதிபதித்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் இறுதி பிரச்சார கூட்டங்களும் , கொழும்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ளன.
ஏதிர்வரும் சனிக்கிழமை இடம் பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ ,புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேசிய மக்கள் சக்தியின்வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களுடைய தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நாளை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு செய்து கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய ,புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை மருதானை டவர் மண்டபத்திற்கு அண்மையில் இரவு 8.30 மணியளவில் இடம் பெறவுள்ளது.
அதற்கு முன்னதாக காலை 9 மணிக்கு மொனராகலையிலும் , பிற்பகல் 2.30 மணிக்கு அம்பாந்தோட்டையிலும் பிற்பகல் 4 மணிக்கு வெலிகமையிலும் , பிற்பகல் 5.30 மணிக்கு காலியிலும் , 7 மணிக்கு களுத்துறையிலும் அவரின் பிரசார கூட்டங்கள் இடம் பெறவுள்ளன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இறுதி பிரச்சார கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கெஸ்பாவையில் இடம் பெறவுள்ளது.
அதற்கு முன்னதாக முற்பகல் 11 மணிக்கு திஸ்ஸமஹாராமயிலும் , பிற்பகல் ஒருமணிக்கு மாத்தறையிலும் , பிற்பகல் 2 மணிக்கு காலியிலும் , பிற்பகல் 3மணிக்கு களுத்துறையிலும் பிற்பகல் 4 மணிக்கு ஹோமாகமையிலும் இடம் பெறவுள்ளன.
அதேவேளை தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தனது தேர்தல் பிரசாரத்தை மஹரகமையில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம் பெறவுள்ள பிரசார கூட்டத்துடன், நிறைவு செய்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் பணிகளுக்காக 60 ஆயிரத்து 175 பொலிசாரும் 8 ஆயிரத்து 80 சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்கிய விஷேட பாதுகாப்பு திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

