அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு – தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்

240 0

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எந்தவகையான பிரச்சினைகளையும் சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி, டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி நேற்று இரவு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பினார்.

அவர் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளோடு தனது அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நேற்று இரவில் இருந்தே குவிக்கப்பட்டனர்.

விடுமுறையில் சென்றுள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளை உடனடியாக பணிக்கு வருமாறு நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படமாட்டாது என்றும், வழக்கமான பாதுகாப்பு பணிகள்தான் மேற்கொள்ளப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே போலீஸ் தரப்பில் பொதுமக்கள் மத்தியில் ஆங்காங்கு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எந்தவகையில் இருந்தாலும், மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ யாரும் வெளிப்படுத்தக்கூடாது என்றும், பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தேவையற்ற கொண்டாட்டங்கள் எதிலும் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், இதுதொடர்பாக துண்டுபிரசுரங்களையும் வெளியிடக்கூடாது என்றும், தீர்ப்புக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ சமூக வலைத்தளங்களில் யாரும் எவ்வித கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என்றும் போலீசார் தங்களது வேண்டுகோளில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று இரவு அவரது அலுவலகத்தில் உயர் அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.