இனவாதத்தை கக்கிய ஆட்சி மீண்டும் தலைதூக்கி விடக்கூடாது – கிளிநொச்சியில் மனோ!

44 0

நாட்டை நாசமாக்கி, இனவாதத்தை கக்கிய, தமிழ் மக்களை கொன்றொழித்த கொடுமையான ஆட்சி மீண்டும் தலைதூக்கிவிடக் கூடாது என்று அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மொட்டுக்கு வாக்களிக்காவிட்டாலும் சஜித் தவிர்ந்த பிரிதொரு சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ராஜபக்ஷக்கள் தமிழ் மக்கள் மத்தியில் தந்திரோபாய தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

இது ஜனாதிபதித் தேர்தலாகும். வெவ்வேறு நபர்களுக்கு வாக்களிப்பதற்கு இது பொதுத் தேர்தல் அல்ல. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் சஜித் பிரேமதாசவும், தோல்வியடைப் போகும் கோத்தாபய ராஜபக்ஷவுமே இறுதி சுற்றில் இருக்கிறார்கள். இவர்களில் ஏதேனும் ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும்.

காணாமலாக்கப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், இனவாதம் , மதவாதம் உக்கிரமடைவதற்கும், நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதற்குமே கோத்தாபயவுக்கு வாக்களிக்க முடியும். அனைத்து மத மக்களும் ஒரே நாட்டவர்களாக வாழ வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேரதல் பிரசாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.