குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உறுதி

307 0

மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வரத்து குறைந்ததால், தமிழகத்தில் வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் மொத்த விற்பனைக் கடைகளில் ரூ.65 முதல் 70 வரையிலும், சில்லறை கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆய்வுக் கூட்டம்இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் வெங்காய விலை உயர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்ட முடிவில் அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறும்போது, ‘‘மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளர். அதன் அடிப்படையில் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இன்னும் 2 நாட்களில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்போம்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பதில்கள்:கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து?உணவுத் துறை அமைச்சர் உத்தரவின்பேரில் பதுக்கலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் இன்று (நவ.6) வெங்காய விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. நாசிக்கில் கொள்முதல் செய்த வெங்காயம் எப்போது வரும்?நாசிக்கில் இருந்து எவ்வளவு வெங்காயம் கிடைக்கும் என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம்.

இதுதவிர, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுக் கடைகளில் கடந்த முறை ரூ.33-க்கு வெங்காயம் விற்கப்பட்டதே?தற்போதும் ரூ.33-க்கு கிடைக்கிறது. அது ஆந்திரா வெங்காயம். பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் வெங்காயம் எப்போதும்போல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

வெங்காயத்தை பதுக்குவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறும்போது, ‘‘மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அனுமதித்த அளவை மீறி யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியதால், தற்போது விலை குறைந்துள்ளது. சரியான விலையில் பொதுமக்களுக்கு வெங்காயம் கிடைக்க முதல்வர் உத்தரவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.