தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு டெமிங் விருது

241 0

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஜப்பானின் மிக உயரிய தொழில்துறை விருதான டெமிங் விருது வழங்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நேற்று நடைபெற்ற விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் டெமிங் விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

தரத்துடன் கூடிய மிகச் சிறப்பான சேவை புரிந்தமைக்காக இந்தவிருது அவருக்கு வழங்கப்படுகிறது. டிக்யூஎம் எனப்படும் 100 சதவீத தர நிர்வாக மேலாண்மைக்கு டெமிங் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொழில்துறையைப் பொறுத்த வரை, டிக்யூஎம் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே சுந்தரம் பாசனர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இவ்விருதை தொடர்ந்து பெற்றுள்ளன. ஆனால் தர மேலாண்மை நிர்வாக சேவைக்காக தனி நபருக்கு வழங்கப்படும் விருதை முதல் முறையாக வேணு சீனிவாசன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கூட்டமைப்பு (ஜேயுஎஸ்இ) இந்த விருதை நிறுவி வழங்கி வருகிறது. ஜப்பான் அல்லாத பிற நாடுகளில் 100 சதவீத தர மேலாண்மையைக் கடைப்பிடிக்கும் நிறுவனங்கள் மற்றும் அத்தகைய தர மேலாண்மை சேவையில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

மிகவும் உயரிய விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டது மிகப் பெரும் கவுரவமாகக் கருதுவதாக விருது ஏற்பு நிகழ்ச்சியில் பேசுகையில் வேணு சீனிவாசன் குறிப்பிட்டார். 1989-ம் ஆண்டிலிருந்து டிக்யூஎம் தரத்தைக் கடைப்பிடிக்கும் தனது நிறுவனத்துக்கும், சுந்தரம் கிளேட்டேன்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் கிடைத்த மிகப் பெரிய கவுரவம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

தர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் அவசியத்தை தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் பின்பற்ற இந்த விருது தூண்டுகோலாக அமையும் என்றும், தாங்கள் தேர்வு செய்த டிக்யூஎம் நிர்வாகம் சரியான பாதையில் இருப்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.