வவுனியாவில் நேற்று மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது இந்நிலையில் அத்தாக்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
எனினும் இன்று காலை வரை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இத்தாக்குதலுக்கு தலைமை வகித்தவர் உட்பட இன்னும் பலர் கைது செய்யப்படவில்லை இதையடுத்து வவுனியா மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை முதல் பொலிசாரின் அசமந்தப் போக்கைக்கண்டித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் தமது ஊழியர்கள் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய போதை பொருள் வியாபாரி உடனடியாக கைது செய்யப்படவேண்டும். பொலிசாரின் பாதுகாப்புடன் இருந்துவரும் தாக்குதல் குழுவினரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் அதுவரையில் தமது போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் எமது கடமையை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பாதுகாப்பு வேண்டும். அதுவரை அவசர தேவைகள் உட்பட அனைத்துப்பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் 12மணிக்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிட்டால் மன்னார், கிளிநொச்சி பகுதிகளிலுள்ள மின்சார சபை ஊழியர்களும் தமக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளும் மின்சார சபை ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

