ஊராட்சிகளில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட பிளாஸ்டிக் மூடிகளுக்கு தட்டுப்பாடு

224 0

தண்ணீர் இல்லாததால் ஊராட்சி பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடத்தேவையான பிளாஸ்டிக் மூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 2.70 கோடி ஆழ்துளைக் கிணறுகளும், தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகளும் உள்ளன. வீடுகளுக்கு 4.5 இஞ்ச், விவசாயம், பொதுப் பயன்பாட்டுக்கு 6.5 இஞ்ச் அகல ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படுகின்றன. மண் சரிவதைத் தடுக்கவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும் 20 – 60 அடி ஆழத்துக்கு பிளாஸ்டிக் குழாய் பதிக்கப்படுகிறது.

நூறு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் குறைந்தது 30 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வருவதில்லை. பணம் செலவாகும் என்பதால் பலர் நீர் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில்லை. மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர்கள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் 13 குழந்தைகள் விழுந்துள்ளனர். இதில் 2 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கணக்கெடுத்தபோது தனியார் இடங்களைக் காட்டிலும், பொது குடிநீர் திட்டங்களுக்காகக் கிராம ஊராட்சிகள் சார்பில் அமைக்கப்பட்டு, பின்னர் தண்ணீர் இல்லாததால் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

பயன்பாடற்ற ஆறரை இஞ்ச் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு 7 இஞ்ச் பிளாஸ்டிக் மூடி தேவைப்படுகிறது. இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரை ஒத்தக்கடை குழாய் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது: பொதுப் பயன்பாட்டுக்கு ஊராட்சிகள் சார்பில் ஆறரை இஞ்ச் ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது தண்ணீர் இல்லாவிட்டால் அதை முறையாக மூடுவதில்லை. வெறும் சாக்கைக் கட்டி வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அந்த சாக்கு நாளடைவில் கிழிந்து போவதால் குழாய் திறந்தவாறு கிடக்கிறது.

நடுக்காட்டுப்பட்டி சம்பவத்துக்குப் பிறகு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு பிளாஸ்டிக் மூடி கேட்டு ஊராட்சிகள் சார்பில் மொத்தமாக ஆர்டர் கொடுக்கப்படுகிறது. 7 இஞ்ச் பிளாஸ்டிக் மூடி இருப்பு இல்லாததால் புதிதாக ஆர்டர் கொடுத்துள்ளோம் என்றார்.

தீயில் வாட்டியும் மூடலாம்

மதுரை மாவட்ட ஆட்சியர் கடந்த வாரம் ஆழ்துளைக் கிணறு தொழில் செய்வோரை அழைத்துப் பேசினார். அப்போது, புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்ததும், பிளாஸ்டிக் பைப்பை நான்காக வெட்டி, அதை மடித்து ஒன்றாகச் சேர்த்து தீயில் வாட்டினால் குழாய் மூடிவிடும். இந்த முறை மிகவும் பாதுகாப்பானது. மூடிக்காகக் காத்திருக்காமல் இந்த முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என யோசனை தெரிவித்தார்.