தமிழகத்தில், எல்லை பிரச்சினை காரணமாக அம்புலன்ஸ் வழங்க மறுக்கப்பட்ட நோயாளியை 4 கி.மீ. தொலைவில் உள்ள வைத்தியசாலைக்கு தள்ளுவண்டியில் கொண்டு சென்றபோது, பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா தமிழக – புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில், கணவருடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் வசிக்கும் மல்லிகாவின் தங்கை பவுனு மற்றும் அவருடைய கணவர் சுப்ரமணியன் ஆகியோர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மல்லிகாவை பார்க்க செங்கல் சூளைக்கு சென்ற போது, சுப்ரமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுப்ரமணியன் மயக்க நிலைக்கு சென்றதால், புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்புலன்ஸ் கேட்கப்பட்டது. ஆனால், சுத்துக்கேணி கிராமம் தமிழகத்தைச் சேர்ந்த பகுதி என்பதால், அம்புலன்ஸ் வழங்க புதுச்சேரி சுகாதார நிலையம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, செங்கல் ஏற்றிச் செல்ல பயன்படுத்தும் தள்ளுவண்டியில் சுப்ரமணியை ஏற்றி, சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள காட்டேக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மல்லிகாவும் அவரது கணவரும் கொண்டு சென்றுள்ளனர்.
சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற சுப்ரமணியை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மாநில எல்லையை காரணம் காட்டி ஒரு நோயாளிக்கு ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், பரிதாபமாக அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

