வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், பணிக்கு திரும்ப, இன்று காலை வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும், பணிக்கு திரும்பாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டு, புதிய டாக்டர்கள் நியமிக்கப்படுவர்,” என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி கெடு விதித்துள்ளார். இதனையடுத்து டாக்டர்கள் போராட்டத்தை திரும்ப பெற்று கொண்டனர்.
சம்பள உயர்வு, காலமுறை பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், ஏழு நாட்களாக, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.நோயாளிகள் நலன் கருதி, டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என, முதல்வர் இ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரையில், போராட்டம் தொடரும் என, டாக்டர்கள் பிடிவாதமாக உள்ளனர்.இந்நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப, நேற்று மாலை வரை, சுகாதாரத் துறை அவகாசம் வழங்கியிருந்தது. அதை ஏற்று, பெரும்பாலான டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.
இதுகுறித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழக அரசு, ஒரு டாக்டரை உருவாக்க, 1.24 கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதற்கு, மக்களின் வரிப்பணம் தான் செலவிடப்படுகிறது. சேவை துறையில் உள்ள டாக்டர்களின் கோரிக்கையை, அரசு பரிசீலித்து, விரைவில் நல்ல முடிவை எடுக்கும்.
அரசு மருத்துவமனைகளில், 16 ஆயிரத்து, 475 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 60க்கும் மேற்பட்ட டாக்டர்கள், இடமாற்றம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் வரை, 4,600க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதில், கடலுார், திருப்பூர், மதுரை, கோவை, தர்மபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், 2,160 டாக்டர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். பணிக்கு திரும்பியவர்களுக்கு, சுகாதாரத்துறை சார்பில் நன்றி.
மீதமுள்ள, 2,523 டாக்டர்கள், பணிக்கு திரும்ப வசதியாக, இன்று காலை வரை, இறுதி கெடு அளிக்கப்படுகிறது. இன்று காலை, குறித்த பணி நேரத்திற்குள், கையொப்பம் இடாத டாக்டர்களின் பணியிடம் காலியாக அறிவிக்கப்படும்; புதிய டாக்டர்களை நியமிக்கும் பணி உடனடியாக துவங்கும்.

